Trichy Tourist Places: திருச்சி போனா கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..!
Trichy Tourist Places in Tamil: பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் கொண்டுள்ள மண்ணாகவும் விளங்குகிறது. பல சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் திருச்சி தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

திருச்சி: போவோமா... ஊர்கோலம்... ஓடும் காவிரி ஆறும்... பார்க்க வேண்டிய இடங்களும். திருச்சியில் என்ன பார்க்கலாம். இதோ உங்களுக்காக.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியைப் பல்வேறு காலகட்டங்களில் சோழர்கள், விஜயநகரப் பேரரசு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள், பல்லவர்கள் என பல காலகட்டங்களிலும் பல மன்னர்கள் ஆண்டுள்ளனர். இதனால் திருச்சி செழிப்பான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. மேலும் பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் கொண்டுள்ள மண்ணாகவும் விளங்குகிறது. பல சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் திருச்சி தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சரி திருச்சிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் என்ன பார்க்கலாம்? கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
திருச்சி மலைக்கோட்டை
திருச்சியின் அடையாளம் என்றால் இதுதான். மலைக்கோட்டை. இளம் மடிப்பு மலையான இமயமலையை விட பழமையான மலையாகும். இந்த மலையின் நடுவே தாயுமானவர் கோயிலும் மலையின் உச்சியில், உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளது. மலையேறினால் போதும் திருச்சியின் பிரமாண்டத்தை ரசித்து பார்க்கலாம். மாலை வேளையில் இயற்கையின் அற்புதம் திருச்சி பகுதியை கலர் புல் ஆக்குவதை ரசித்து பார்ப்பதற்காகவே செல்ல வேண்டும்.
முக்கொம்பு அணை
திருச்சி என்றதும் நினைவிற்கு வருவது காவிரி தான். கரைபுரண்டு ஓடி வரும் காவிரியை கட்டுப்படுத்தி கிளையாகப் பிரிப்பது தான் இந்த முக்கொம்பு அணை. இந்த முக்கொம்பு பகுதியில் தான் காவேரி மூன்றாவது பிரிந்து டெல்டா மாவட்டங்களுக்கு விவசாய வளம் செழிக்க உதவுகிறது. விவசாயப் பயன்பாடு மட்டுமின்றி முக்கொம்பு அணை திருச்சி மக்களின் பொழுதுபோக்கிற்குச் சிறந்த இடமாகவும் விளங்குகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் திருச்சி மக்கள் இங்கு குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். இதனால் திருச்சிக்கு வந்தால் இது பார்க்க வேண்டிய மிக முக்கிய இடமாகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம் என்றதும் ரங்கநாதர் கோயில் தான் அனைவர் மனதிலும் எழும். கோயில் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதுபோலத் தான் ஸ்ரீரங்கமும். ஆற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் பார்க்க பார்க்க திகைக்கச் செய்யும் என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆகையால் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் அரங்கநாதரை தரிசிக்கத் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். மேலும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் இங்கு நடைபெறும் பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு உலகப் புகழ்பெற்றதாகும். இதனால் திருச்சி வரும் மக்கள் கட்டாயம் பார்க்கும் இடத்தில் முக்கியமானதாக ஸ்ரீரங்கம் உள்ளது.
கம்பீரம் காட்டும் கல்லணை
2000 ஆண்டுகளாகக் கம்பீரமாக நிற்கும் கல்லணை தமிழரின் கட்டுமானத் திறனை உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே உள்ளது. பொங்கி வரும் காவிரியின் சீற்றத்தைக் தணித்து, அதனால் ஏற்படும் இழப்பைத் தடுக்கும் வகையில் இரண்டாம் கரிகாலச் சோழனால் அமைக்கப்பட்டது தான் இந்த கல்லணை. திருச்சி மக்களின் ஃபேவரைட் வீக் எண்ட் ஸ்பாட் என்றால் அது கல்லணைதான். அணை மட்டுமின்றி கல்லணையைக் கட்டிய கரிகால சோழனின் மணிமண்டபமும் உள்ளது. இதில் கல்லணை குறித்து, கரிகாலச் சோழன் குறித்தும் பல வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கல்லணையை காண கண்கோடி வேண்டும்.
சமயபுரம் மாரியம்மன் கோயில்
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களுக்கெல்லாம் திருச்சியில் உள்ள இந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் தான் முதன்மையாக விளங்குகிறது. பொதுவாக சாமிக்கு வேண்டிக் கொண்டு மக்கள் விரதம் இருப்பதைக் கேட்டிருப்போம், ஆனால் இங்கு மக்களுக்காக அம்மனே விரதம் இருப்பது சிறப்பானதாகும். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்த பிறகு தான் தமிழகத்தின் மற்ற அம்மன் கோயிலில் திருவிழாக்கள் நடக்கும். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.
வாங்க... திருச்சிக்கு வாங்க... இந்த இடங்களை பார்த்த பிறகு திருச்சியிலிருந்து புறப்படவே மனசு வரவே வராதுங்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

