திருச்சியில் நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக சுற்றும் கடிகாரம் - இதன் சிறப்பு என்ன..?
நூற்றாண்டுகளைக் கடந்த திருச்சி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு அம்சமாக விளங்கும் கடிகாரம். இதன் சிறப்பை பற்றி பார்போம்.
திருச்சி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் பல வரலாற்று சிறப்புகளை உருவாக்கியுள்ளனர். அதில் குறிப்பாக திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் பல நூறு ஏக்கர் இடத்தை தேர்வு செய்து. அங்கு இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் ஏ.தாத்தா பிள்ளை என்ற ஒப்பந்ததாரர் மூலம் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்சாரத்தை நம்பி இல்லாமல் சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்கையான காற்று கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும், லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு உத்திரங்கள், தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டன. மேலும், தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல மரப் பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அழகிய வடிவமைப்புடன் கூடிய இக்கட்டிடத்தை 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.ஜி.பர்ன் திறந்து வைத்தார். திருச்சி மட்டுமின்றி அரியலூர், கரூர் உட்பட அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த அனைத்துப் பகுதிகளின் வழக்குகளும் இங்கு விசாரிக்கப்பட்டதால், ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்தன.
இதனால் பின்னாளில் இக்கட்டிடத்தில் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காக குற்றவியல் நீதிமன்றங்கள், குடிமையியல் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்டவை, இதே வளாகத்துக்குள் தனித்தனியாக கட்டப்பட்டன. தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும் கட்டப்பட்டது. எனினும் பாரம்பரியமிக்க, பழமையான கட்டிடத்தில் ஆவணக் காப்பகம், நீதிமன்ற நிர்வாக அலுவலகம், வங்கி உள்ளிட்டவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க நீதிமன்றத்தின் மற்றொரு சிறப்பு கடிகாரம். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கடிகார தயாரிப்பாளர்கள் வில்லியம் பாட்ஸ் அண்ட்சன்ஸ் என்பவரால் 1921 ஆம் ஆண்டு இந்த கடிகாரம் உருவாக்கப்பட்டது. இந்த கடிகாரம் 5 அடி விட்டம் கொண்ட மூன்று திடமான வார்ப்பிரும்பு டயல்களுடன் கருப்பு வண்ணம் பூசப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை போன்றே நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் திருச்சி மக்களுக்கு நேரம் பார்க்கும் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கடிகாரத்தில் இருந்து எழுப்பும் ஒலியின் ஓசை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்