திருச்சியில் கட்டணமில்லா பேருந்தில் இதுவரை 10 கோடி பேர் பயணம்
திருச்சி மாவட்டத்தில் அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் இதுவரை 10 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் அரசு நகர சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு பிறகு தலைமைச்செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதில் 3வது திட்டம், தமிழ்நாடு முழுவதும் அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதாகும். இந்த திட்டம் மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. நாள்தோறும் கட்டணமில்லா பஸ்களில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 37.41 லட்சம். இதேபோல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கின்றனர். இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், 50 பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் பூசப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன்யடைந்து வருகிறார்கள். குறிப்பாக இதுக்குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறும்போது..பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களில் 164 கோடி மகளிர் அரசுப் பேருந்தில் இலவச பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர். தினமும் 35 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இலவச பயணம் மூலம் பயன் அடைந்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டதை அடுத்து . தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை 335 சாதாரண கட்டண நகர பஸ்கள் மூலம் இயக்கப்படும் அனைத்து வழித்தடங்களிலும் 9 கோடியே 94 லட்சம் முறை மகளிரும், 45 லட்சம் முறை திருநங்கைகளும், 9 கோடியே 55 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளும் 40 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளின் துணையர்களும் ஆக மொத்தம் 10 கோடியே 4 ஆயிரம் முறை மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பயணிகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். திருச்சி மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்த மகளிர் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் மொத்த பயணிகளில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் 60.05 சதவீதமாகும். மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு இலவச பேருந்துக்களை கல்லூரி மாணவிகள், தினக்கூலி செல்லும் பெண்கள், முதியோர்கள் என பலதரபட்டோர் பயன் அடைந்து வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பேருந்தில் பயனம் செய்யும் மகளிரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மகளிர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.