Trichy: தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சோகம்.. மது குடித்து 2 பேர் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!
திருச்சி மாவட்டத்தில் 2 பேர் மது குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள தச்சங்குறிச்சி கீழரத வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், வைஷாலி (13), வைஷ்ணவி (8) என 2 மகள்களும் உள்ளனர். இதில் வைஷாலி திருச்சி மேலப்புதூரில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி 8-ம் வகுப்பும், வைஷ்ணவி தச்சங்குறிச்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை அவர் எழவில்லை. இதனை கண்டு அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை எழுப்பியபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதேபோல் தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(60). கொத்தனாரான இவர், தச்சங்குறிச்சி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று காலை இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த சிவக்குமார் மற்றும் முனியாண்டி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், உயிரிழந்த 2 பேரும் தினமும் மது குடிப்பார்கள் என்று தெரிகிறது. நேற்று(நேற்று முன்தினம்) மதியம் அதிக அளவில் மது குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை நிலை தெரியவரும் என்று தெரிவித்தனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் சூப்பிரண்டு குத்தாலிங்கம் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் 2 பேரின் பிரேத பரிசோதனையில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு, விஷம், எலிக்கொல்லி மருந்துகள் போன்ற எதுவும் இல்லை என்றும், உணவு ஏதும் சாப்பிடாமல் அதிகமான குடி காரணமாக இறந்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.