திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் இது வேணும்... பொதுமக்கள் கோரிக்கை என்ன?
திருச்சி ரயில் சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை இணைக்கும் சாலைகளில் நடுவில் தடுப்புகள் (மீடியன்) இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருச்சி: திருச்சி மாநகரில் முக்கியமான இடங்களில் சாலையின் நடுவில் தடுப்புகள் (மீடியன்) அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி நகரத்தில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்புகளாலும் சாலைகள் குறுகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
திருச்சி ரயில் சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை இணைக்கும் சாலைகளில் நடுவில் தடுப்புகள் (மீடியன்) இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் காலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் பெற்றோர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ராகின்ஸ் சாலை, SBI மெயின் ரோடு, மேஜர் சரவணன் சாலை (ராயல் ரோடு) போன்ற சாலைகளில் இந்த நிலைமை உள்ளது. சாலையின் நடுவில் தடுப்புகள் அமைத்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.

மேலும் தெரு விளக்குகளை நடுவில் அமைத்தால் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். திருச்சி ரயில் சந்திப்பில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் ராகின்ஸ் சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் காலை, மாலை வேளைகளில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். மேலும் இப்பகுதியில் அதிக வணிக கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கடை முன்பே வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பேருந்துகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. பயணிகள் தங்கள் ரயில்களை தவறவிடாமல் இருக்க பேருந்தில் இருந்து இறங்கி ரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர். நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ரயில் சந்திப்பு நுழைவாயிலில் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு விபத்துகள் நடந்துள்ளன. ராகின்ஸ் சாலையில் நடுவில் தடுப்பு அமைத்தால் இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம். மேலும் சட்டவிரோத வாகன நிறுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம். ராகின்ஸ் சாலையை பாரதியார் மற்றும் மெக்டொனால்ட்ஸ் சாலைகளுடன் இணைக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் ரோட்டிலும் இதே நிலைமைதான். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் தடுமாறுகின்றனர். முக்கியமாக பென்சன் எடுக்க வரும் முதியவர்கள் படும் சிரமம் சொல்லி மாளாது. இபி சாலையில் வாழைப்பழ ஏல மையத்திற்கு அருகில் சாலையின் நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக உள்ளது. அதேபோல இங்கும் அமைக்கலாம் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேஜர் சரவணன் சாலையில் (ராயல் ரோடு) தள்ளுவண்டி கடைகள் அதிகமாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் சாலையின் மீது நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒழுங்காக நிறுத்தாததால் பேருந்துகள் வேறு பாதையில் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. சாலையில் ஒரு பக்கம் மட்டுமே தெரு விளக்குகள் உள்ளன. இதனால் மறுபக்கம் இருட்டாக இருக்கிறது. எனவே திருச்சி மாநகரில் முக்கியமான சாலைகளின் நடுவில் தடுப்பு அமைப்பதால் வாகன போக்குவரத்து சீராக இருக்கும். மேலும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதும் தடுக்கப்படும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சாலையின் நடுவில் தடுப்புகள் அமைத்து அதில் தெரு விளக்குகளை பொருத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் சாலையில் வெளிச்சம் அதிகரிக்கும். மேஜர் சரவணன் சாலையில் நடுவில் தடுப்பு அமைப்பதற்கான திட்டத்தை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். நிதி வந்தவுடன் வேலையை தொடங்குவோம் என்றார்.






















