சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர்; குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினரை குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக மாநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுத்திட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். தொடர்ந்து கண்காணித்து எந்தவிதமான குற்ற சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பங்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையினை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் எடுத்து வருகிறார்கள்.
சிறுமிக்கு பாலியல் சீண்டல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் கடந்த (17.03.2024)-ந் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம், ராமமூர்த்தி நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்து 10 வயது சிறுமியை, சிறுமியின் உறவினர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த (19.03.2024)-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில், எதிரி வல்லரசு (20) த/பெ.முருகன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் எதிரி வல்லரசு என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி வல்லரசு மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை
மேலும், திருச்சி மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.