நள்ளிரவில் நடந்த பரபரப்பு.... கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த உயர் மின் கோபுரம்
காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். அதேசமயம் இளைஞர்கள் புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
முக்கொம்பு மேலனைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 31 ஆயிரம் கன அடியும் கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது.
இந்நிலையில் கொள்ளிடம் நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடையாமல் இருக்க பாலத்தின் அருகே பக்கவாட்டு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பணையில் ஒரு பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை உடைந்துள்ளது.
மேலும் கொள்ளிடம் பாலத்தின் அருகில் உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நிகூறியுள்ளது.டது. மேலும் இந்த மின் கோபுரம் சாயாமல் இருப்பதற்காக நேற்று மின் ஊழியர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு இழுத்து கட்டியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள் தண்ணீரில் சாய்ந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொள்ளிடம் பாலத்தில் இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். அதேசமயம் இளைஞர்கள் புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மேட்டூரில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும். ஆகையால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கையை பொதுமக்கள் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.