திருச்சி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட 19 பேர் அதிரடியாக கைது
திருச்சி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 19 பேர் கைது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் நடப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 4 தங்கும் விடுதிகளில் வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்கும் விடுதி உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள நடுநிராவி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 67), புதுக்கோட்டை அருகே உள்ள கீழையூர் குடித்தெருவை சேர்ந்த சுதந்திரம் (49), அரியலூர் மாவட்டம், பெரிய பட்டக்காடு வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (33), திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற தென்றல்அரசன் (24), மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூரை சேர்ந்த சிவராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரம்பலூர் அருகே உள்ள பெரலி பகுதியை சேர்ந்த வேம்பு(38), ஈரோடு அருகே உள்ள பெரிய செம்பூர் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம்(51), சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த சீனிவாசன்(39), திருச்சி பொன்னேரிபுரம் முல்லை நகரை சேர்ந்த தமிழரசன் (39),ஸ்ரீரங்கம் முல்லையப்பா நகரைச் சேர்ந்த செல்வம் (38), சமயபுரம் சக்திநகரை சேர்ந்த கார்த்தி (38), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த முனியசாமி (51) ஆகியோர் உள்பட மொத்தம் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர் தனிப்படை போலீசார் அவர்களை சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துஅவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தங்கும் விடுதிகள், அதன் உரிமையாளர்கள், நிர்வாகிகளை பற்றி விவரங்களை சேகரித்து வரும் போலீசார், அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டம் பகுதிகள் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களில் திருச்சியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடியாக தனிப்படை காவல்துறையினர் சமயபுரம் ,பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 4 தங்கும் விடுதிகளில் பெண்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் ஆகியோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாலியல் தொழில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அண்மை காலமாக ரகசிய தகவல்கள் காவல்துறைக்கு வந்து கொண்டிருக்கிறது . அதன் அடிப்படையில் தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளை வைத்திருக்கும் அனைவரிடமும் தற்போது விசாரணையை மேற்கொண்டுள்ளோம். மேலும் இதுபோன்று பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.