Trichy Airport: திருச்சி புதிய விமான முனையம் திறப்பு - என்னென்ன வசதிகள் உள்ளன?
திருச்சி புதிய சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது, பயணிகள் மகிழ்ச்சி.
திருச்சி விமான நிலையம் உருவான வரலாறு...
இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசு தங்களின் போர் விமானங்களை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் 1942ம் ஆண்டு திருச்சி காஜாமலையில் ஒரு விமான தளத்தை உருவாக்கியது. இங்கு தரையிறங்கும் போர் விமானங்கள், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலையில் அமைக்கப்பட்டிருந்த பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
1944ம் ஆண்டுக்கு பின் விமானநிலையம் ஸ்டேஜிங் போஸ்ட் மற்றும் பணியாளர் போக்குவரத்து மையமாக செயல்பட தொடங்கியது. அதன்பின் 1947ல் இலங்கை அரசு, கொழும்பு - திருச்சி இடையே விமானங்களை இயக்க அனுமதி கேட்டது. இதனால் இந்திய அரசு விமான நிலையத்தை முழுமையாக செயல்படும் வகையில் மேம்படுத்தியது.
இதையடுத்து 1948ம் ஆண்டு இங்கிருந்து கொழும்புக்கு விமான செயல்பாடுகளை அனுமதித்தது. இதன்பின் திருச்சி- கொழும்பு மற்றும் மும்பை வழியாக கராச்சிக்கும் விமான சேவைகள் தொடங்கியது.
மேலும், 1950க்கு பிறகு பல்வேறு கால கட்டங்களில் திருச்சி, சென்னை, மதுரை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் வழித்தடங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு சேவைகளை தொடங்கியது. 1990ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் திருச்சியை, குவைத் மற்றும் ஷார்ஜா போன்ற மத்திய கிழக்கு நகரங்களுடன் இணைக்க தொடங்கியது.
2000ம் ஆண்டு முதல் திருச்சி விமான நிலையத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களும் விமான சேவைகளை வழங்க தொடங்கின. அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியை, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்க தொடங்கியது.
இந்நிலையில் 2009ம் ஆண்டு நவீன ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் கட்டப்பட்டபோது, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தொழில்நுட்ப தொகுதியை உள்ளடக்கிய சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டது. இது தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்டது. மொத்தம் 702 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதில் இரண்டடுக்கு முனையம் 1,26,770 அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 8,136 அடி நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டு 2009 பிப்.21 ம் தேதி திறக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.
திருச்சி புதிய பன்னாட்டு விமானநிலையம் திறப்பு - மக்கள் மகிழ்ச்சி..
திருச்சி பன்னாட்டு விமான நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன் (45 லட்சம்) பயணிகளை கையாள முடியும். ஒரே சமயத்தில் 10 விமானங்களில் உள்ள பயணிகளை கையாளலாம். புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது. 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம்.
சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனையம் செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 02.01.2024 அன்று திறந்து வைத்தார்.
ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாளலாம். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்பு கோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.
ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் என்பது குறிப்பிடத்தக்கது.