திருச்சி : மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு..
திருச்சி மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 618 இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வது என உலக பொது சுகாதார துறை அறிவித்திருந்தது, அதன்படி மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்கிய பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.இதன்படி கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் 5 வாரமாக நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம். இந்த தடுப்பூசியால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை 12 மணிநேரம் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில் திருச்சி மாவட்டத்தில் 618 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் 17,96,661 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை திருச்சி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 13,30,101, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 4,66,560 மொத்தம் 17,96,661 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் மாநில அரசு தெரிவித்துள்ளது . மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த பெரும் தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பலரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செய்து கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள், என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது எனவும் மக்கள் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொண்டால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக கூடும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.