தெருவோர வியாபாரிகளை அகற்றுவதில் காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை - மேயர் அன்பழகன் தகவல்
திருச்சி மாநகராட்சி சாலைகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து சாலைகள் மற்றும் நடைபாதைகளை மீட்க வேண்டும். மேலும், கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அதிகரித்து வரும் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை குறித்து கவுன்சிலர்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக அண்ணா விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள தெருவோர வியாபாரிகள் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அதிகாலையில் தங்கள் கடைகளைத் திறந்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். டி.வி.எஸ்., டோல்கேட் அருகே, இதே நிலை நீடித்ததால், தெருவோர வியாபாரிகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தெருவோர வியாபாரிகள் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர். மேலும் பல கவுன்சிலர்களும் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் தற்காலிக கடைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லைநகர் சாலை, சாஸ்திரி நகர், பாலக்கரை, டிவிஎஸ் டோல்கேட், வயலூர் சாலை, கருமண்டபம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து முறையாக மாநகராட்சி அனுமதி பெறாமல் பலர் கடைகளை நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. அதேசமயம் இரவு நேரங்களில் தற்காலிக கடைகள் அதிகரித்துள்ளது. வாகனங்களை அனைத்தும் சாலை நடுவே நிறுத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள். பல முறை இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். ஆகையால் மாநகராட்சி மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும். மேலும் மாநகராட்சியின் முறைப்படி அனுமதி பெறாமல் இயங்கி வரும் கடைகள் மீதும் இரவு நேரங்களில் தற்காலிகமாக வாகனங்களில் ஆங்காங்கே நிறுத்தி வியாபாரம் செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகனிடம் கேட்டபோது, திருச்சி மாநகராட்சி பொருத்தவரை முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாத வகையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தற்காலிகமாக இரவு நேரங்களில் உணவு கடைகளை அமைப்பதும், நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதும் என புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்றார். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் குறிப்பாக தெருவோர வியாபாரிகளை அகற்றுவதில் காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.