திருச்சியின் அடையாளமாக திகழும் ‘மெயின்காட் கேட்’ சிறப்பும், வரலாறும்..!
திருச்சியில் பல நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக நிற்கும் வரலாற்று சின்னம் மெயின்காட் கேட். இத்தகையை சிறப்பு மிக்க கோட்டையின் சுவரை பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாலர்கள் கோரிக்கை.
திருச்சி என்றாலே வரலாறு என்று சொல்லும் அளவிற்கு சிறப்புமிக்க ஒரு இடமாக திகழ்ந்து வருகிறது. திருச்சியில் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் அசைக்க முடியாத நிலையில் கம்பீரமாக இருக்கும் மெயின்காட் கேட் பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.. ஆங்கிலேயர் படைத்தளபதியான லாரன்ஸ் மற்றும் ராபர்ட் ஓம் எழுதிய குறிப்புகளும், வரைபடமும் தான் கோட்டையைப் பற்றி நமக்கு கிடைக்கும் தரவுகளாகும். 1753 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ல் அவர் எழுதிய குறிப்பில், இரண்டு கோட்டைகள் இருந்ததாகவும், 6000 அடி நீளமும், 36 அடி அகலமும் கொண்ட மிகப் பலம் வாய்ந்ததாக அவை இருந்தன என குறிப்பிட்டுள்ளார்கள். வெளிக்கோட்டை சுமார் 18 அடி உயரமும் 5 அடி அகலமும், உள்கோட்டை 30 அடி உயரமும் 20 அடி அகலமும் உள்ளதாக இருந்துள்ளது. வெளி கோட்டைக்கும், உள்கோட்டைக்கும் இடையே 25 அடி அகல பாதை இருந்திருக்கிறது. மேலும் வெளி கோட்டைக்கு, வெளியே கோட்டையைச் சுற்றி பெரிய அகழி இருந்துள்ளது. அகழி 30 அடி அகலமும், 12 அடி ஆழமும் உள்ளதாக அமைக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இக்கோட்டையானது திருச்சி மாநகரத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மதுரை நாயக்கர் அரசு உருவாக்க காரணமாக இருந்த மன்னர் விஸ்வநாத நாயக்கர் (1530-1564) காலத்தில் திருச்சியின் நகரத்தை சுற்றியும் கற்களால் ஆன ஒரு கோட்டை கட்டபட்டது. இது 16 கிலோமீட்டர் சுற்றளவில் அகழியுடன் அமைக்கபட்டிருந்தது.
மேலும் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கு இடையில் அடிக்கடி நடைபெற்ற கர்நாடகப் போர்களில் இது முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இருப்பினும், மெயின்காட் கேட் என்று அழைக்கபடும் இக்கோட்டையின் மேற்கு புறத்தில் இருந்த வளைவான பிரதான நுழைவாயிலும் அதனுடன் ஒட்டிய சிறு கட்டிடப் பகுதிகளும் ( உயரம் 8.8 மீ , மற்றும் நீளம் 60 மீ), மட்டும் தற்போது எஞ்சியுள்ளது. தற்போது உள்ள கீழப்பொலிவார்டு சாலை, மேலப்பொலிவார்டு சாலை, பட்டர்வொர்த் ரோடு பகுதிகளில் கோட்டைச் சுவர்கள் இருந்ததாக அடையாளங்கள் உள்ளன. அவற்றுள் இடிக்காமல் விட்டு வைத்துள்ள கோட்டையின் பகுதியே மெயின்கார்டு கேட் ஆகும். மேலும் இக்கோட்டையை நகர வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக நினைத்து முனிசிபாலிட்டி 1868 இல் இடிக்க தொடங்கியது. கோட்டை தரைமட்டமாக்க 12 வருடங்கள் ஆகி 1880 இல் தான் முடிந்தது. கோட்டை இடிபாடுகளை அகழியில் போட்டு மூடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டது. மரங்கள் நிறைந்த அகலமான சாலை என்னும் பொருளில் பொலிவார்டு என்று அவை அழைக்கப்பட்டன. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த பட்டர்வொர்த் என்பவரின் பெயரை சாலைக்கு பெயராக வைக்கப்பட்டது.
மன்னர்கள் காலத்தில் பல்வேறு கட்ட போர்களை கண்ட இந்த கோட்டையானது நாளடைவில் சிதலமடைந்து வருகிறது. கோட்டை சுவரை சுற்றியும் கடைகள், ஆக்கிரமிப்புகள் என அமைந்துள்ளது. நமது வரலாற்றில் மிக முக்கியமான சின்னமாக திருச்சியில் மெயின்காட் கேட் திகழந்து வருகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த கோட்டையின் சிறப்பும், வரலாறும், பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் மாநில அரசு நமது வரலாற்றை வருங்காலம் சங்கதிகள் தெளிவாக தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு புரனமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மெயின்கார்டு கேட் தற்போது மக்கள் அதிகமாக கூடும் ஒரு இடமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இது ஒரு லேண்ட்மார்க் ஆக உள்ளது. மேலும் இது ஒரு வரலாற்றுச் சின்னமாக பார்க்கப்பட்டாலும், வரும் காலங்களில் தற்போது இருக்கும் இந்த ஒரு பகுதிக்காவது எந்த விதமான பாதிப்பும் வரக்கூடாது என்பது, சமூக ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்