போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு, இச்சம்பவம் எச்சரிக்கையாக இருக்கும்- காவல்துறை ஆணையர் சத்யபிரியா
திருச்சி மாநகரில் விசாரணைக்கு செல்லும் போது குற்றவாளிகள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்புகாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகர், புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள் ஆவர். துரைசாமி மீது கஞ்சா கடத்தல்,கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 60 மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளது. இந்த நிலையில் காவல்துறையினரால் தேடபட்டுவந்த இருவரையும் இன்று காலை அவர்கள் வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணை, இருவரும் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க போலீசார் அவர்கள் இருவரையும் குழுமாகி அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் போலீசாரை தள்ளிவிட்டு அவர்கள் ஜிப்பிலிருந்து இறங்கி தப்பித்து ஓடினர். இருவரையும் விரட்டி பிடிக்கும்போது குற்றவாளிகளிடம் இருந்த அரிவாளால் காவல்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை வெட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் குற்றவாளிகளை பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளையும், போலீசாரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா அவர்கள் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கூறியது... சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.
மேலும் விசாரணைக்காகவோ, கைது செய்தோ குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும்பொழுது போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றார். மேலும் அந்த ரவுடிகள் தாக்கிய அரிவாள் அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து தான் வெட்டி உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோல் குற்றவாளிகள் போலீசாரை தாக்கும் போது இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற காவல் ஆணையர் சத்ய பிரியா அங்கு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.