திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 1,278 வாக்காளர்கள் உள்ளனர் - ஆட்சியர் பிரதீப்குமார்
75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7-வது இடத்தில் உள்ளது - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.14 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3.09 கோடி பேரும் உள்ளனர். இவர்களில் மொத்தமாக 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. டிச.8ம் தேதி வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளா் பெயா் சோ்ப்பு ஆகியவற்றுக்காக மனுக்களை அளிக்கலாம். இந்த ஆண்டில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1,278 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2,544 வாக்குச்சாவடிகள் உள்ளன. 75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7-வது இடத்தில் உள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்