திருச்சியில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சியில் பெண்கள், குழந்தைகளை 500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்தால் கடுமையான நடவடிக்கை பாயும் - மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தடுக்கவேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைகள் நலக்குழுமம், சைல்டு லைன் ஹெல்ப் மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. இதன்மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்குறிப்பிட்ட அமைப்புகளும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றே கூறப்படுகிறது.
திருச்சி அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறையில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இதனை பயன்படுத்தி கொண்டு கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்தனர். கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா மண்டபத்திற்கு வரும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர்.
இந்நிலையில் 500 ரூபாய் வாடகைக்கு குழந்தைகளை பெற்று வந்து அம்மா மண்டபத்தில் பிச்சை எடுத்து வருவதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது தெரிந்தும் மாவட்ட நிர்வாகமோ, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைல்ட் லைன் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது போன்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குழந்தைகளை வாடகைக்கு விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் சுமார் 70-க்கும் அதிகமான பெண்கள் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த விவகாரத்தில் இது போன்ற செயலுக்கு பெற்றோர்கள் பாதுகாவலர்கள் உடந்தையாக இருந்தால் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் )2015,பிரிவு 76-ன் படி 5 வருடம் முதல் 10 வருடம் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.எனவே குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இனிவரும் காலங்களில் இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.