(Source: ECI/ABP News/ABP Majha)
ஆட்டோவில் போதை ஊசி, மாத்திரை விற்பனை - திருச்சி அருகே 3 பேர் கைது
திருச்சி அருகே ஆட்டோவில் போதை ஊசி, மாத்திரைகள் விற்றதாக தாய், மகன் உட்பட மூன்று பேர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகளின் பட்டியல்களை தயாரித்து அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க தனிப்படை அமைத்துள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போதை மாத்திரை ,போதை ஊசி ,போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி திருச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் பொதுமக்களுக்கு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும், அதே சமயம் குற்ற சம்பவங்களில ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி அருகே காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் (32), தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து போதை வஸ்துகளை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு, திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26) , இவரது தாய் ரமிஜாபேகம் (43), ஹசன்அலியின் தம்பி மனைவி ஆஷிகாபானு (20) ஆகிய 3 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், ஆட்டோவில் சோதனை செய்ததில் டேபெண்டடோல் மாத்திரை 26, நைட்ரஜன் மாத்திரை 7, சிரிஞ்சு 12 , 7 செல்போன், ஒரு வாள், ஒரு அரிவாள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான ஹசன் அலி மீது காந்திமார்க்கெட் மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் விற்றதாக 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.