பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 25,000 கொள்ளை - போலீஸ் தீவிர விசாரணை
திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளியின் பூட்டை உடைத்து கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகளின் கல்வித் தரத்தை மிஞ்சும் அளவிற்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில கல்வி மிகச் சிறப்பாக கற்றுத் தரப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். அதேபோன்று தொழில்நுட்பங்கள், அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் முன்னேறி வரக்கூடிய அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பான கல்வியை வழங்கி வருகிறார்கள் என பெற்றோர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் தேர்வுகள் முடிந்து பள்ளி,கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
மாநகராட்சிப் பள்ளியில் பூட்டை உடைத்து கொள்ளை
இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் அம்சவல்லி மற்றும் பள்ளி ஊழியர்கள் நேற்று புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளியை பூட்டி விட்டு வீடு சென்றனர். இந்த நிலையில், நேற்று வழக்கமாக பள்ளியை திறக்க வாட்ச்மேன் வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார். இதன் பின்னர், தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, தலைமை ஆசிரியை அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிறுவர் சிறுமியரின் விளையாட்டு பொருட்கள், மின் விசிறிகள் திருடப்பட்டு இருந்தன. நூலகத்திலும் பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியை அம்சவல்லி திருச்சி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து தீவிர விசாரனை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம்
மேலும் பள்ளியின் வாசலில் இரவு நேரங்களில் சில சமூக விரோத கும்பல்கள் அங்கே அமர்வதும், மது அருந்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து ஏற்கனவே பள்ளி சார்பிலும், அப்பகுதியினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், நேற்று பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருச்சியில் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.