CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா விடுதலைக்கு எதிரான வழக்கின் விசாரணை தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தை சிபிஐ கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான ஊழல் வழக்கில், ஆ. ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை தொடங்க சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ஆ. ராசா உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
2G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் பின்னணி
இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கில், 2008-ம் ஆண்டு அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சரான திமுக எம்.பி ஆ. ராசா, எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பிக்கும் கடைசி தேதியை முன்கூட்டியே மாற்றியது, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என விதிகளை மாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டது. தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி உரிமங்களை ஒதுக்கியதில், கருவூலத்திற்கு ரூ.30,984 கோடி இழப்பும், மொத்தமாக அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த வழக்கின் விவரங்களை ஆராய்ந்து, சிபிஐ-ன் வாதங்களையும் கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2017 டிசட்மபர் 21-ல், வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட 16 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை, தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இதையடுத்து, 2024 மார்ச் மாதம், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் ஷர்மாவின் தனி நீதிபதி அமர்வு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கான முழு ஆதாரங்களையும் ஆராய்ந்து, தீர்ப்பில் பல முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டு, அதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என தீர்மானித்து, சிபிஐ-ன் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேதி கேட்டு சிபிஐ மனு
இந்த நிலையில், 2ஜி முறைகேடு வழக்கில், ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தயாராக உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணையின்போது வாதிட்ட சிறப்பு வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான சஞ்சய் ஜெயின், இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளதால், விசாரணைக்காக பல தேதிகளை ஒதுக்குமாறும், அல்லது விசாரணை தேதிகளை நீதிமன்றம் நிர்ணயித்து வெளியிட ஒரு தேதியை ஒதுக்குமாறும் கோரினார்.
இந்த வாதத்தை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி விகாஸ் மகாஜன், அது குறித்து முடிவெடுக்க மார்ச் 18ம் தேதிக்கு விசாணையை ஒத்திவைத்தார்.
மார்ச் 18-ம் தேதி விசாணையின்போது, மேல் முறையீடு மீதான விசாரணைகளுக்கு தேதி ஒதுக்கப்பட்டால், அது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதனால், அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில், இந்த விசாரணை திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

