திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலயில் கடும் போக்குவரத்து நெரிசல் - திணறும் வாகன ஓட்டிகள்
காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி எதிரொலியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அவை மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1 டோல்கேட்டை அடையலாம். அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சியை சென்றடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீரங்கம் செல்ல கும்பகோணத்தான் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
காவேரி பாலத்தில் பராமரிப்பு பணி எதிரொலியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.#Trichydistrict #Cauverybridge #heavytraffic #trichychennainationalhighway @abpnadu pic.twitter.com/yfLZ8WnxFY
— Dheepan M R (@mrdheepan) November 30, 2022
இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற காவிரி பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இதன்காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் இதில் செல்வதால் கடந்த ஒரு வாரமாக புது காவிரி பாலம் பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. காலை, மாலை வேளைகளில் ஒரு வாகனம் அந்த பாலத்தை கடந்து செல்ல அரை மணி நேரம் வரை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகளை விரைந்து, முடிக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்