திருச்சி பறவைகள் பூங்கா எப்போது திறக்கப்படும்? - ஆட்சியர் அளித்த தகவல் இதோ
திருச்சி பறவைகள் பூங்கா கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்
தமிழ்நாட்டின் மைய பகுதியாக திகழ்கிறது. திருச்சி மாவட்டம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று திமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் முக்கொம்பு அணைப் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா கட்டப்பட்டது. இவற்றை தவிர்த்து எந்த ஒரு பொழுதுபோக்கு இடங்கள் திருச்சியில் இல்லை. இந்நிலையில் இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்பேரில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடமுருட்டி காவிரிக்கரையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முயற்சியில் இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 13 கோடி ரூபாய் இதற்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பூங்காவில் புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழலான இடங்கள் மட்டுமல்லாது 7டி திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட இருக்கின்றது.
குறிப்பாக இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்த பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் 13 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பறவைகள் பூங்காவுக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஜூலை மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியது.
தற்போது பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்ந்து பறவைகள் பூங்காவும் திறக்கப்படும். இதேபோல் முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி இன்னும் பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் மக்களுகாக செய்யபடும் திட்டஙகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.