Trichy Best Airport : சிறந்த விமானநிலைய பட்டியல்.. ஆசிய அளவில்.. திருச்சிக்கு 2-ஆம் இடம்..! முழு விவரம் இதோ..
4 கோடி பயணிக்கு மேல் வந்து செல்லும் விமான நிலைய பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, சிறந்த விமான நிலையத்திற்கான விருது மும்பைக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்த முக்கிய விமான நிலையமாக இருப்பது திருச்சி விமான நிலையம். 702.02 ஏக்கர் (284.10 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், நகரின் மையத்திற்கு தெற்கே சுமார் 5 கிமீ (3.1 மைல்) தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 336 இல் அமைந்துள்ளது.
31ஆவது பரபரப்பான விமான நிலையம்:
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் 31வது பரபரப்பான விமான நிலையம், திருச்சி விமான நிலையம் ஆகும். மொத்த சர்வதேச விமான இயக்கத்தில் 11வது பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையும் திருச்சி விமான நிலையத்திற்கு சாரும்.
மொத்த பயணிகள் போக்குவரத்தில், சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம் இதுவாகும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி விமான நிலையம் வருகிறது. ISO 9001:2008 தர சான்றிதழை பெற்றுள்ள திருச்சி விமான நிலையம், 2012ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையம், இரண்டு அடுத்தடுத்த முனையங்களைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு, நவீன ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் கட்டப்பட்டபோது, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தொழில்நுட்பத் தொகுதியை உள்ளடக்கிய சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டது. இது தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
சிறப்பாக செயல்பட்ட திருச்சி விமான நிலையம்:
இந்நிலையில், ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கும் குறைவான பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் திருச்சி 2ஆம் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் கணக்கெடுப்பில் ஆசியாவில் சிறந்த விமானநிலைய பட்டியலில் திருச்சி 2ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 4 கோடி பயணிக்கும் மேல் வந்து செல்லும் மிக பெரிய விமான நிலைய பட்டியலில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
மும்பை விமான நிலையம்:
4 கோடி பயணிக்கு மேல் வந்து செல்லும் விமான நிலைய பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, சிறந்த விமான நிலையத்திற்கான விருது மும்பைக்கு கிடைத்துள்ளது.
விமான போக்குவரத்து துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒன்றாக இந்த விருதுகள் உள்ளது. ஏனெனில், அவை பயணிகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான விமான நிலையத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாக இது கருதப்படுகின்றன.
இதையும் படிக்க: Private Bus : ”தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை” - டெண்டர் பற்றி அமைச்சர் சிவசங்கர் விளக்கம்