’திருச்சி மாநகராட்சி உடன் இணையும் 25 ஊராட்சிகள்’ - 100 வார்டுகளாக உருவெடுக்கும் திருச்சி மாநகராட்சி
’’25 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் திட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்’’
திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானியக் கோரிக்கையில் அமைச்சர் நேரு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளது. முசிறி, லால்குடி, பேரூராட்சிகளும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளன. இந்நிலையில் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் தலைவர்கள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள லால்குடி மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 5 ஊராட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியை விரிவுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 25 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் திட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவற்றை குறித்து ஆலோசனை செய்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விளக்கங்கள் அளித்து அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஊராட்சிகளை இணைக்கும் பணியும், வார்டுகளை சீரமைக்கும் பணியும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சிகளின் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் என அனைவரையும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்பு மக்களிடையே திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது. மேலும் இப்போதுள்ள வார்டுகளிலும், புதிய வார்டுகளிலும், மக்கள் தொகை, வாக்காளர்கள் எண்ணிக்கை சீரான வகையில் இருக்கும் வகையில் வார்டுகள் சீரமைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிந்து இதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஊரக வளர்ச்சி, முகமை திட்ட இயக்குனர், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.