அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு; தமிழ்நாடு அரச உதவி கரம் நீட்டுமா...?
தமிழர்களின் பாரம்பரியமான மல்லர்கம்பம் விளையாட்டை மீட்டெடுக்க தமிழக அரசு உதவிசெய்ய வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை.
தமிழகத்தில் இன்று பெரும்பாலும் வெஸ்டர்ன் டான்ஸ், கீ போர்டு, கிடார், கராத்தே, சிலம்பம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பொதுவாக பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்வதை தான் விரும்புகின்றனர். மேற்கத்திய கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது நாட்டுப்புறக் கலைகளுக்கு கொடுப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருபுறம் இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகத்தில் மூழ்கி போய் இருந்தாலும் அதே வேளையில் சத்தமே இல்லாமல் நமது பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியும், பயிற்சியும் ஏதோ ஒரு மூலையில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பெரும்பாலும் நமது பாரம்பரிய கலைகளான பறை, ஒயில், கரகம், வீரக்கலையான சிலம்பம் போன்றவற்றைத் தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தமிழகத்தில் வெகுவாக அறியப்படாது மிகவும் சுவாரஸ்சியமான கலை என்றால் அது "மல்லர் கம்பம்" ஆகும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல அந்தரத்தில் ஒரு பறவையை போல தொங்கி, உடலை ரப்பர் போல வளைத்து சாகசம் செய்யும் வீரமும் தைரியமும் நிறைந்து, பார்வையாளர்கள் கண் சிமிட்டக் கூட யோசிக்கும் அளவிற்கு சவாலான, அற்புதமான கலை மல்லர் கம்பம் ஆகும்.
மேலும் அன்றைய சோழ, பல்லவ மன்னர் காலத்தில் அதிகமாக விளையாடப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று மல்லர் கம்பம் ஆகும். "மல்" என்னும் சொல் "வளத்தை" குறிக்கும். மல்லன் என்றால் "வீரன்" என்று பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிலை மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர்கம்பம் என்று மூன்று வகையான மல்லர் கம்பம் உள்ளது. மாணவர்கள் மல்லர்கம்பம் பயில்வதால் உடல் வளைவு திறன் மேம்படுகிறது. உடலையும் ,மனதையும் ஒருநிலைப்படுத்த உதவுகிறது. இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து மீளவும் மல்லர்கம்பம் உதவுகிறது என்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம் விளையாட்டை மிகுந்த ஆர்வமுடன் பயின்று வருகிறார்கள். இந்த விளையாட்டை குறித்து அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் அவர்களிடம் கேட்டபோது.. தமிழகத்தில் நமது பாரம்பரியமான கலைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. இந்நிலையில் தனது தெரிந்த தமிழர்களின் அடையாளமாய் விளங்கிய மல்லர் மல்லர் கம்பம் விளையாட்டை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறேன். இந்த பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கிராம புரங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் ஆகையால் இலவசமாக பயிற்ச்சி வழங்கபட்டு வருகிறது என்றார். குறிப்பாக திருச்சியில் நடந்து முடிந்த சுதந்திர தினத்தன்று அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் எனது மாணவர்கள் செய்த சாகசத்தை கண்டு அனைவரும் பாராட்டி முதல் பரிசை வழங்கினர். இதனை தொடர்ந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கொள்ள மாணவர்களுக்கு தீவிரமாக பயிற்ச்சி அளிக்கபட்டு வருகிறேன் என்றார்.
மேலும் பலவிதமான விளையாட்டு போட்டிகள் வந்தாலும் நமது பாரம்பரியமான விலையாட்டான மல்லர் கம்பம் விளையாட்டை என்னால் முடிந்த வரை வெளிக்கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இத்தகைய சாதனையான விளையாட்டை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதுபோன்ற கலைகள் அரசின் கவனம் பெற்று இந்த கலையை தமிழகத்தில் பரவலாக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மல்லர் கம்பம் போன்ற கலைகளை பயிற்சிக் கொடுத்து இந்த கலையையும், இதன் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ், மாணவிகளை ஊக்கபடுத்தி, நமது பாரம்பரியமான விளையாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் உதவி கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.