தமிழ்நாட்டில் இலை மலரலாம், தாமரை வளரக்கூடாது - சுப .வீரபாண்டியன்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா இன்னும் சாகவில்லை, நிர்மலா சீதாராமன் உருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - சுப. வீரபாண்டியன் பேச்சு.
திருச்சி மாநகர், உறையூர் பகுதியில் எல்லோருக்கும் எல்லாம், திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர செயலாளர், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேலும், சிறப்பு விருந்தினர் திராவிட இயக்கம் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய திருச்சி மேயர் அன்பழகன் கூறியது.. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னைக்கு நிகராக திருச்சியை உருவாக்க வேண்டும் என்று ஆசியாவிலேயே இல்லாத அளவிற்குக் பெரிய பேருந்து முனையம் கட்டபட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்பாலம், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள். அதேபோல் நமது முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
ஆகையால் தமிழ்நாடு மேன்மேலும் வளர வேண்டும் என்றால் வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இதனை தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசுகையில், “தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார் பிரதமர் மோடி. இங்கு வந்து மக்களை சந்தித்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களை சந்திக்காமல் அவருடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் விளம்பரத்திற்காக மக்களை சந்தித்து வருகிறார். வருகின்ற தேர்தலுடன் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்” என்றார்.
மேடையில் திராவிட இயக்கம் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை மக்களிடையே பரப்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் நாகரிகமாக அவருக்கு பேச தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு தேவையான தகுதிகளை கேட்ட உடனே கிடைத்து விடுவதாக கூறுகிறார்கள். உண்மைதான் பாஜகவில் நிற்பதற்கு ஆளில்லை, அதே போன்று கூட்டணி கட்சி இருக்கக்கூடியவர்களுக்கும் அவர்கள் கேட்கும் தொகுதி நிற்பதற்கு ஆள் இல்லை ,என்பதால் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தான் பாஜகவுக்கு இறுதித் தேர்தல் ஆகும். மேலும் பிரதமர் மோடி தேர்தல் வருவதால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முடிவுராத திட்டங்களை திறந்து வைத்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பொதுமக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மோடி.
திமுக தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்கு சென்னைக்கு, மிக முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று. ஜெயலலிதா இன்னும் சாகவில்லை ,நிர்மலா சீதாராமன் உருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ,அதே திமிர்த்தனம், ஆனசம் உச்சமாக உள்ளது. பாஜக அண்ணாமலை தமிழ்நாட்டில் நடை பயணத்தை மேற்கொள்ளவில்லை நடை பயிற்சியை மேற்கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கு அடுத்ததாக அதிமுக மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விலை மலரலாம், தாமரை வளர கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.