ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்கள் இனிமே இது கூடவே கூடாது: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பொதுமக்கள், பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.

தஞ்சாவூர்: இனிமே ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான கோயில் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே தினந்தோறும் பல லட்சம் மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பக்தர்கள் ொண்டு வரும் கோயிலுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. இதனையடுத்து கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் எளிதில் மக்காததால், நிலம், கடல் மற்றும் நீர்நிலைகளில் குவிந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுகின்றன. அதே மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி மக்களுக்கு உணவாகிறது. இதனால் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள், பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதித்தது. அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடை மீறலுக்கு அபராதம் விதிக்கின்றன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதில் பெரும் சவால் அமைந்துள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடையுள்ள நிலையில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம் உட்பட 12 கோயில் களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோயில்களின் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகிய 12 கோயில்கள் பிளாஸ்டிக் இல்லா கோயில்களாக மாற்றிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இக்கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















