'ரம்மி விளம்பரத்தில் நான் நடிச்சதால மட்டும் சமூகம் கெட்டுவிடல' - ஆவேசப்பட்ட சரத்குமார்!
தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.- சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் .
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி செயலாளர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது.. '’உலக அளவில் பேரல் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பேரல் விலை குறையும்போதும் இங்கு விலை ஏற்றப்படுகிறது என்பதே உண்மை. ஆகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் குறைந்து விடும். பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக எங்களின் முடிவை தெரிவிப்போம். மக்களுக்கு சேவை செய்ய தேர்தல் களத்துக்கு வரவேண்டும். ஆனால் இன்றைக்கு தேர்தலில் போட்டியிட சாதாரண குடிமகன்கள் தயக்கப்படுகிறார்கள். ஏனென்றால் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஈடு கொடுத்து நம்மால் முடியாது என்று ஒதுங்குகிறார்கள். இது உண்மையான ஜனநாயகம் கிடையாது. நாம் தயங்கும்போது கூட்டணிக்கு செல்ல நேரிடுகிறது.
மேலும் இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கின்றோம். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிப்பதால் மட்டுமே சமூகம் கெட்டுப் போகவில்லை. ஆன்லைன் ரம்மி ஆன்லைன் கிரிக்கெட் போன்றவை உலக அளவில் இருக்கிறது. இதில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. நாமக்கல்லில் ஒருவர் ஆன்லைன் ரம்மி பார்த்து விளையாடி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதும் தடை செய்வதும் அரசின் கையில் இருக்கிறது. இதற்கு ஒட்டுமொத்தமாக சட்டத்தை கொண்டு வந்து தடுக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். இதேபோல் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனால் தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? எனவே உலகத்தில் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப்பார்த்து கெட்டுப்போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்.
போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆன்லைன் ரம்மி, டாஸ்மாக் போன்றவற்றை தடை செய்து நாட்டை திருத்துங்கள். போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒதுக்கினால் அடக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னணி கட்சிகளாக இருக்கின்றன. அ.தி.மு.க.வில் இப்போது அடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து சொல்ல நான் ஜோசியர் இல்லை. ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை. முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.