சமயபுரத்தில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம் - தினமும் 5000 பேருக்கு வழங்க இலக்கு
’’பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்தபடியாக அதிக உண்டியல் வருவாய் உடைய கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது’’
தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணியில் உள்ள முருகன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் தினசரி 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஏற்கனவே நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வரும் 17ஆம் தேதி முதல் மூன்று முக்கிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே அமைச்சர் அறிவித்த செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில், ஒருநாள் முன்னதாக அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரம் பேர் தரிசனம் செய்வதற்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலை தேடி வருகிறார்கள். மொட்டை அடித்தல், காணிக்கை செலுத்துதல் போன்ற பல்வேறு வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு மிகவும் சிறப்புடைய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், இட வசதிகளை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக அன்னதானம் வழங்க வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது இதன்படி சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார். இப்போது வரை அங்கு பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சக்தி பீடங்களில் முதன் மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில் இது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்தபடியாக அதிக உண்டியல் வருவாய் உடையது. அதிகளவில் பக்தர்கள் வரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன்படி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.