திருச்சியில் தனியார் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி - ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்
திருச்சி நிதி நிறுவன அதிபரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 3 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 32). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிதி நிறுவனத்தில் சேலம் அயோத்தியா பட்டணத்தை சேர்ந்த சரவணன், தனது தொழிலுக்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பலமுறை பணம் கடனாக பெற்று, அதனை முறையாக திருப்பி செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சரவணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகியோர் தாமசை சந்தித்தனர். அப்போது, தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் 3 மாதத்தில் வாங்கிய முதலீட்டு தொகையை திருப்பி தருகிறோம். அத்துடன், லாபத்தில் 3-ல் 1 பங்கு கொடுக்கிறோம் என்று ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பிய தாமஸ், தனது நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.44 லட்சத்தை சரவணன், வெள்ளைச்சாமி ஆகியோரிடம் வழங்கினார். மேலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வாயிலாகவும் பணம் பெற்று கொடுத்துள்ளார். இதன்படி மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சத்தை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து தாமஸ், சேலம் அயோத்தியா பட்டணத்தில் உள்ள சரவணன் வீட்டுக்குச் சென்று வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அப்போது சரவணன், அவரது மனைவி ஷோபனா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து பணத்தை திருப்பித்தர மறுத்ததோடு மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தாமஸ், தன்னிடம் ரூ.1 கோடியே 77 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி திருச்சி ஜே.எம்-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சரவணன், அவருடைய மனைவி ஷோபனா மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய 3 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மோசடி கும்பல் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பணம் செலுத்தினால் மூன்று மடங்கு நான்கு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருச்சியில் கடந்த சில மாதங்களில் பலரிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் மோசடி செய்துள்ளனர். இவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், விசாரணையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முன்பின் தெரியாத நபரிடம் பணத்தை கொடுப்பது, தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுப்பது, நாம் செலுத்தும் பணத்தை விட மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிகமாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் நம்பி ஏமாற வேண்டாம். பொது மக்களுக்கு காவல்துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் தொடர்ந்து இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், கவனத்துடன் செயல்படும் வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்