இனி ஓட முடியாது... ஒளிய முடியாது: 61 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் - எங்கு தெரியுமா?
அனைத்திற்கும் காவல்துறையினர்தான் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் நாம் இருக்கும் பகுதியை கண்காணிக்க இது போன்ற நடவடிக்கை எடுத்துக் கொள்வது நல்லது.

திருச்சி: இனிமே ஓட முடியாது... ஒளிய முடியாது... கழுகு பார்வை இருந்து கொண்டே இருக்கும். என்ன விஷயம் தெரியுங்களா?
திருட்டு, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றை கண்காணிக்க திருச்சி வயர்லஸ் சாலையில் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 61 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டில் உள்ள வயர்லஸ் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் டிஎஸ்என் அவென்யூ உட்பட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், கொள்ளை சம்பவம், வழிப்பறி, உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவதும் திருச்சி மாநகராட்சி மற்றும் டி.எஸ்.என்.அவென்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.59 லட்சம் மதிப்பில் 61 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருக்காங்க.
இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக குடியிருப்போர் நலச்சங்க அலுவலக கட்டிடத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, முழு நேரமாக கண்காணிக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை கண்காணிக்கும் அறைக்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் கண்காணிப்பு கேமரா அலுவலகத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் இயக்கி வைத்து பார்வையிட்டார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா துவக்க விழாவில் மண்டல தலைவர் துர்கா தேவி , உதவி ஆணையர் சண்முகம், காவல்த் துறை உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இப்பகுதியில் குடியிருப்போர்கள் சார்பில் கூறுகையில், அனைத்திற்கும் காவல்துறையினர்தான் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் நாம் இருக்கும் பகுதியை கண்காணிக்க இது போன்ற நடவடிக்கை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் குற்றச் செயல்கள் நிச்சயம் குறையும், மேலும் அதிகாலையில் பெண்கள் வீடுகளின் முன்பு வாசல் தெளித்து கோலம் போடுவது போன்றவற்றை அச்சமில்லாமல் செய்ய முடியும் என்றனர்.





















