Crime: 300 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை மீட்பு - 2 பேர் கைது
கும்பகோணத்தில் திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
300 ஆண்டுகள் பழமை:
கும்பகோணத்தில் ஆயிரமாண்டு பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 300 ஆண்டு பழங்கால அனுமன் சிலை கடந்த 2019-ம் ஆண்டு திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலை கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில நபர்களின் காட்சிகளை கண்டறிந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் திருவள்ளுவர் மாவட்டம் தும்பிக்குளம் சின்னத்தெருவை சேர்ந்த நீலகண்டன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சிலை மீட்பு:
விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவருடன் சேர்ந்து அந்த சிலையை திருடி வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நீலகண்டன் வீட்டை தனிப்படை பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான சோழர் கால நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட அனுமன் சிலையை கைப்பற்றினர். இதையடுத்து நீலகண்டன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் கைது செய்த தனிப்படையினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் ஜெயந்த் முரளி பாராட்டினார்.
இதுகுறித்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறும்போது, இதுவரை பழங்கால ஓவியங்கள், கற்சிலைகள், மர சிற்பங்கள், உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் என 248 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகமாக சிலைகள் மீட்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அனுமன் சிலையின் உயரம் 29 செ.மீட்டர், அகலம் 23 செ.மீட்டர், 10 கிலோ எடை கொண்டதாகும். இந்த சிலை கடத்தல் தொடர்பாக கோவில் ஊழியர்களுக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்