(Source: ECI/ABP News/ABP Majha)
ஜிம் செல்வோர் கவனத்திற்கு; புரோட்டின் பவுடர்களை பயன்படுத்தக்கூடாது - டாக்டர் அட்வைஸ்
உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி ஈடுபடுபவர்கள் புரோட்டின் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - மருத்துவர்கள் அறிவுறுத்தல்
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடந்தது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி, நீலகண்ணன் பேசுகையில், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அதி நவீன சிகிச்சை அளிப்பதற்காகவும், நோயாளிகளின் பராமரிப்புக்கும் அப்போலோ மருத்துவமனையின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் சக மருத்துவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
மருத்துவக் கல்வி கவுரவ இயக்குநர் டாக்டர் எம்.சென்னியப்பன், இத்தகைய மருத்துவ கல்வி கருத்தரங்குகள் வாயிலாக மருத்துவர்கள் தங்களின் துறை சார் அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பின்னர் குழு விவாதத்துடன் கூட்டம் முடிந்தது. இந்த அமர்வை மூத்த இதயநோய் நிபுணர்கள் டாக்டர் ஆர்.கிருஷ்ணன், டாக்டர் ஆர்.மணிவாசகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல நோயாளிகள் டிரான்ஸ்கேதெட்டர் இதய வால்வு பொருத்துதல் (TAVI), நுண்துளை இதய அறுவை சிகிச்சை (MICS), ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மற்றும் சிக்கலான மின் இயக்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளைப் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர் என்று அப்போலோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு தலைவர் மற்றும் இணை துணைத் தலைவர் ஜெயராமன் ,
டாக்டர்கள் காதர் சாஹிப் அஷ்ரஃப், ஷியாம் சுந்தர், ரவீந்திரன், ஸ்ரீகாந்த் பூமா, டாக்டர் அரவிந்த், சரவணன், ரோகிணி ஆகியோர் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து எடுத்துப் பேசினர்.
தீவிர நோய் பாதிப்புக்கு ஆளாகி நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் கூட திருச்சி அப்போலோ மருத்துவமனையில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் வாயிலான பயன் அடைந்து வருகின்றனர் என்றும், இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு ICD சாதனம் பொருத்துவதில் தொடங்கி 3D மேப்பிங் தொழில்நுட்பம் வரை பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். முடிவில் மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம் நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மருத்துவர் காதர் பேசுகையில்..
தமிழ்நாட்டை மட்டுமல்ல உலக அளவில் கடந்த சில மாதங்களாக இதய கோளாறுகள் பிரச்சனை ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிறிய வயது முதல் முதியோர் வரையான பலருக்கும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியான முறையில் தூக்கம் இல்லாமல் இருப்பது, மன அழுத்தம், சரியான முறையில் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாதது தான் முக்கிய காரணமாக தெரிகிறது. ஆகையால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடுவதற்கு மனிதர்கள் தேவையற்ற சிந்தனையை தவிர்க்கவும் மன உளைச்சலை தவிர்க்கவும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அங்கு விற்கக்கூடிய பவுடர்களை மருத்துவர்கள் ஆலோசனையை இல்லாமல் உண்ணக்கூடாது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். ஆனால் அதை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் உடனடியாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சிலர் புரோட்டின் பவுடர்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது மரணம் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என கூறினார்.