Pongal 2024 : திருச்சியில் சமத்துவ பொங்கல் விழா: உற்சாகமாக கொண்டாடிய காவல்துறையினர்!
திருச்சி மாநகரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் "பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் "பொங்கல் விழா" ஆயுதப்படையில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக காவல்துறையை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக வயது வாரியாக 20 மீட்டர், 25 மீட்டர், 75 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், சாக்கு பையுடன் ஓட்டம், Slow Cycle ஓட்டம், Lemon & Spoon, Shot put, கோலப்போட்டி, மியூச்சிக்கல் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கைபந்து போன்ற பல்வேறு போட்டிகள் காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 5 வரை நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 200 நபர்களுக்கு மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மேலும் நடைபெற்ற விழாவில் தமிழர்கள் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய பொருள்களை நிகழ்கால குழந்தைகளுக்கு நினைவூட்டும் வகையில் ஏர்கலப்பை, அம்மிக்கல், உரல், உலக்கை, ஆட்டுக்கல், சண்டை ஆடு, மாட்டுவண்டி, வாடிவாசல், ஜல்லிகட்டு காளை, குதிரை வண்டி, தோட்டக்கலை செடிகள் போன்றவைகளை காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததை மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பார்வையிட்டார்கள். இவ்விழாவில் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள். பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் திருச்சி கலைக்காவேரி நுண்கலை கல்லூரி மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சியும், காவலர்களின் குழந்தைகள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் விழாவிற்கு தேவையான பொருள்களை கடைவீதிகளில் வாங்கி செல்லவும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநகரம் முழுவதும் சுமார் 1000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், திருச்சி மாநகரருக்குள் வரும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையத்தை கடந்த 12.01.2024ந்தேதி திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. விபத்துக்கள் இல்லாத பொங்கல் திருநாளை கொண்டாட திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கேட்டுக்கொண்டுள்ளார்.