PM Modi Visits Trichy: ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நிறைவு - இன்று ஒத்திகை நிகழ்ச்சி
திருச்சி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நிறைவு, இன்று முழுவதும் ஒத்திக்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் இன்று 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர்ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். மேலும், பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார். வழிநெடுகிலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
இதனை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய கோவில்களில் தரிசனம் மேற்கொள்கிறார். அந்த வகையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக நாளை தினம் வருகை தரவுள்ளார். திருச்சி விமான நிலையத்திற்கு 10:30க்கு வருகை தரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீரங்கம் கோயில் அருகே அதாவது கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதிக்கு எதிராக இருக்கக்கூடிய கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 3 பிரத்யேக ஹெலிபேட் தளம் அமைக்கும் பணியானது நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.
இந்த ஹெலிபேட் தளத்திற்கு வருகை தரும் பிரதமர் இங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று அங்கு 11 மணியில் இருந்து 12:30 மணி வரை தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் இதே ஹெலிபேட் தளத்திற்கு வருகை தந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரம் செல்லவுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். திருக்கோவிலை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் நேற்று மாலை முதல் அடைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் திருச்சி மாவட்டத்தை முழுவதுமாக காவல்துறை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதி முழுவதுமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், அப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் முழுமையாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது அப்பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனடியாக அவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து, மீண்டும் இங்கிருந்து புறப்படும் வரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.