பெரம்பலூர்: வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை..!
பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர், மேலும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில் வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இதில் பெரம்பலூர் அருகே எசனை வனப்பகுதியில் முயல், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நேற்று அதிகாலை ஒரு கும்பல் வந்திருப்பதாக பெரம்பலூர் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனவர் பிரதீப்குமார், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் எசனை வனப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை வேட்டையாட ஒரு லாரியில் உபகரணங்கள், வேட்டை நாய்களுடன் ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து லாரியில் சென்று கொண்டிருந்தனர். அந்த கும்பலை பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா சந்திரன் நாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிசாமி தலைமையில் புதுக்கோட்டை மற்றும் திருச்சியை சேர்ந்த 21 பேர் வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு 23 வேட்டை நாய்களை கூடவே அழைத்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். ஆனால் வனவிலங்குகளை வேட்டையாட வந்த மற்றவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வனத்துறையினர் மறுத்து விட்டனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களை சுற்றியுள்ள வன பகுதிகளில் தொடர்ந்து சிலர் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக தகவல் கிடைத்தது. குறிப்பாக அதிகாலை, இரவு நேரங்களில் நாய்களின் உதவியோடு வேட்டை நடைபெற்று வந்துள்ளது. மேலும் இதுகுறித்து ரகசியமாக தகவல் தெரிவிக்கவேண்டும் என பொதுமக்களிடம் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் நேற்று கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவது சட்டபடி குற்றம் ஆகும். மேலும் இது போன்ற தவறான செயலில் ஈடுபடுவோர்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்