(Source: ECI/ABP News/ABP Majha)
Trichy: மக்களே உஷார்.. அதிகரிக்கும் போலி நகைகள் விற்பனை - 4 பேர் கைது
திருச்சியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.
திருச்சி பாலக்கரை மணல்வாரிதுறை ரோடு ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 27). நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கணபதிக்கு சொந்தமான நகை செய்யும் கடையில் கூலிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர்கள் வினோத், சிவா ஆகியோர் சேலத்தில் உள்ள பவுல்ராஜ் என்பவரிடம் குறைந்த விலைக்கு நகை வாங்கி தொழில் செய்யலாம் என்று கூறி, அவரை பவுல்ராஜிடம் அறிமுகம் செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணி, கணபதி ஆகியோர் சேர்ந்து அவரிடம் நகை வாங்க வருவதாக கூறியுள்ளனர்.
பணத்தை பறித்து ஓட்டம்:
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி திண்டுக்கல்லில் சேலம் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடை அருகில் பவுல்ராஜிடம் ரூ.5 லட்சம் கொடுத்து 100 கிராம் தங்கக்கட்டியை அவர்கள் வாங்கியுள்ளனர். அதை பரிசோதித்தபோது, அது சுத்த தங்கமாக இருந்துள்ளது. இதனால் அவரிடம் அதிக தங்கம் வாங்கி தொழில் செய்ய நினைத்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி மாலை 4 மணிக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திண்டுக்கல்-திருச்சி ரோட்டில் மஞ்சம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு பவுல்ராஜுக்கு போன் செய்துள்ளனர். அவர் தனது நண்பர்கள் வெள்ளை நிற காரில் வருவதாக கூறியுள்ளார். அதன்படி காரில் வந்தவர்கள், அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தங்கத்தை கொடுக்காமல் தப்பிச்சென்றுவிட்டனர்.
மீண்டும் கைவரிசை:
மேலும், பவுல்ராஜ் போனை எடுக்கவில்லை. அப்போதுதான் இருவருக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து பவுல்ராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகளை தேடி வந்தனர். சுமார் 8 மாதமாக தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் அந்த கும்பல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கியது.
இதன்படி, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் (48) என்பவரிடம், திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர்பாஷா என்பவர் தங்களிடம் வெளிநாட்டு தங்கம் இருப்பதாகவும், ரூ.15 லட்சம் கொண்டு வந்தால் தங்கத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி, ஜியாவுதீன் தனது நண்பர் கார்த்தியுடன் ரூ.14½ லட்சத்தை எடுத்துக்கொண்டு கடந்த 18-ந்தேதி மாலை துவரங்குறிச்சி மோர்னிமலை முருகன் கோவில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு அன்வர்பாஷா 7 பேருடன் காரில் வந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் மணப்பாறையில் கைவரிசை காட்டியதும், இவர்களும் ஒரே கும்பல் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து அந்த கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.
போலி தங்கக்கட்டிகள்:
இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் வளநாடு அருகே டி.பெருவாய் பகுதியில் காரில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியை சேர்ந்த சரவணன் (42), திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த பெருமாள் (46), கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அனீஸ்ஜேம்ஸ் (42), மதுரையை சேர்ந்த சக்திவேல் (51) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பல்தான் பாலசுப்பிரமணியிடமும் கைவரிசை காட்டியது என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம், 100 கிராம் தங்கக்கட்டி, 10 போலி தங்கக்கட்டிகள், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், 2 காசோலை புத்தகங்கள், 2 போலி வாகன பதிவு எண் எழுதிய பலகைகள், தமிழக அரசு முத்திரை கொண்ட சிவில் நீதிபதி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கர், 12 சிம்கார்டுகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.