திருச்சியில் புதிய சர்வதேச விமான முனையம் ஜன., 2இல் திறக்க திட்டம்; பிரதமர் பங்கேற்பு? - அதிகாரிகள் தகவல்
திருச்சி புதிய விமான நிலையம் திறப்பு விழா ஜன.2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் சுமார் ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2019 பிப்.10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணிகள் அனைத்தையும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் கட்டுமானப் பணிகள் தடைபட்டதால், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக புதிய முனைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதம் உள்ள தூய்மைப் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.
மேலும், இங்கு புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய முனையத்தில், தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் உள்ளது. இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ‘கிரிஹா-4’ தர நிலை கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையம் வரும் ஜன.2-ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும், இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர காவல் ஆணையர் என்.காமினி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புதிய முனையத்தின் பணிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.