நமக்கு நாமே திட்டம் - திருச்சி மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு
’’நமக்கு நாமே திட்டத்தின் படி ஒரு பணியின் மொத்த மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கை பொதுமக்கள் செலுத்தினால் மீதி தொகையை அரசே ஏற்று பணியினை மேற்கொள்ளப்படும்’’
தமிழ்நாட்டில் மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொது மக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு தூர்வாருதல் மற்றும் கரையினை பலப்படுத்துதல் பங்களிப்பு தொகை 50%, விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல். மற்றும் எல்.இ.டி. மின்விளக்கு அமைத்தல், சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துல் மற்றும் புனரமைத்தல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வழிவகையில் உள்ளது.
குறிப்பாக மொத்த மதிப்பீட்டு தொகையில் பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்தினால் மீதி தொகையை அரசே ஏற்று பணியினை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தனி நபராகவோ, குழுவாகவோ, குடியிருப்போர் நல சங்கங்கள் மூலமாகவோ, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ பணியினை மேற்கொள்ளலாம்.இதற்கான பொது மக்களின் பங்களிப்பு தொகையை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பின், மாநகராட்சியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.பொது மக்களின் பங்களிப்பு 50% க்கு மேல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் பணியினை அவர்களே மாநகராட்சியின் மேற்பார்வையில் மேற்கொள்ளலாம்.
மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்கு இதுவரை பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் ரூ.2 லட்சம், லயன் டேட்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.8.50 லட்சம்கிரெடாய் ரூ.5 லட்சம், சாரதாஸ் ரூ.7.50 லட்சம், திருவானைக்கோவில் சாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.0.67 லட்சம், பாரத் பிளாட் பிரமோட்டர்ஸ் யோகம்நகருக்காக ரூ.0.67 லட்சம், சங்கிலியாண்டபுரம் அஸ்வின் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.1.87 லட்சம், மதுரை ரோடு சரவணா எலக்ட்ரிக்கல் எண்டர்பிரைசஸ் ரூ.0.5லட்சம், சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் 2வது தெரு பொதுமக்கள் சார்பாக ரூ.1.67 லட்சம், கிழக்கு தாராநல்லூர் எஸ்.வி.ஆர்.கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.1 லட்சம், வரகனேரி ஜே.ஸ்டீபன் பிஷப் நகர் பொதுமக்கள் சார்பாக ரூ.8.33 லட்சம் மற்றும் அரியமங்கலம் கல்யாணராமன் தெருகுடியிருப்போர் நலச்சங்கம் சார்பில்ரூ.18.16 லட்சம் என ஆக மொத்தம் இதுவரை ரூ.55.87 லட்சம் மாநகராட்சி அலுவலகத்தில் காசோலையாகவும், வங்கி வரைவோலையாகவும் சமப்பித்துள்ளனர். எனவே நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் பணிக்கு மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு 50சதவீதம் 100 சதவீதம் தொகையை மாநகராட்சியில் செலுத்தி உடனடியாக தேவைப்படும் வசதியை பெற்றிட பொதுமக்கள் மற்றும் நலச்சங்கங்களை கேட்டு கொள்ளப்படுகிறது என திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.