ஆளுநர் ரவி பாஜகவின் ஊதுகோலாக செயல்படுகிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆளுநராக செயல்பட்டால் பிரச்சனை இல்லை, அவர் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த 140 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சிறைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகள் அவர்களின் இல்லம் போன்று பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து சத்தான உணவுகள் அளித்து சிறைச்சாலை இயங்கி வருகிறது. மேலும் அவர்கள் நல்ல வழியில் செயல்பட கூடிய அளவிற்கு நூலகங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பான முறையில் சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகிறார்கள். சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகளுக்கு விடுதலை ஆகும் போது அவர்கள் விருப்பப்படும் துறைகளிலே வேலைவாய்ப்பை உருவாக்கி தரப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு குற்றங்களில் சிறைக்கு வந்தவர்கள் திருந்தி வாழ்வதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். குறிப்பாக வெளியே சென்று வேலை பார்ப்பதை விட சிறையில் வேலை பார்த்து மாத சம்பளத்தை அவர்களின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கும் வழி வகையும் செய்யப்பட்டுள்ளது. அதனால் சிறைவாசிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறைச்சாலை என்பது தண்டனை கொடுப்பதற்கு மட்டுமல்ல திருந்தி மறுவாழ்வு வாழ்வதற்கும் ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி செயல்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் என்பவரின் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன் அரசு சார்பாக முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் தனது தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான பாஸ்போர்ட், விசா அனைத்தும் மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு பொறுத்த வரை அவரை சிறை கைதியாக நடத்தாமல் சிறப்பான முறையில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு தாய்நாடு செல்வதற்கான பாஸ்போர்ட் , விசா வந்தவுடன் அவரது விருப்பம் என்னவோ அது போன்று செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது.
சிறை கைதிகளாக இருக்கக்கூடிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தப்பித்து செல்வது சில காரணங்களால் நடைபெறுகிறது. ஆனால் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து தப்பி சென்றவர்களை மீண்டும் கைது செய்து உள்ளோம். அதேபோன்று விரைவில் மற்ற நபர்களையும் கைது செய்து சட்ட ரீதியான தண்டனைகளை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள், ஆளுநராக இருந்து தனது பதவியை செய்தால் பிரச்சனை கிடையாது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக மாறினால் பிரச்சனை. இன்றைக்கு கூட ஆளுநர் அவர்கள் நாகையில் பேசியிருக்கிறார் பல குடியிருப்புகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று. அதை எந்த இடம் என்று சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த அரசு குற்றம் செய்பவர்களுக்கு துணையாக என்றும் நிற்காது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆளுநராக செயல்பட்டால் பிரச்சனை இல்லை, அவர் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாஜவின் ஊதுகோளாக செயல்படுகிறார்.
தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி என்ற நிலைமை மாறிப்போனது. ஆகையால் பாஜக தான் எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடிய செய்திகளை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆகையால் தான் ஆளுநர் ரவி அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பலமிழந்து உள்ளது. ஆகையால் ஆளுநர் செயல்பாடு தமிழகத்தில் எதிர்கட்சியை பலமிழந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்றார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.