பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கபட்ட கல்மர படிமம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள கல்மர படிம பகுதி அங்குள்ள ஆணைவாரி கிளை ஓடையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 அடி நீளமுள்ள கல்மர படிம பகுதி அங்குள்ள ஆணைவாரி கிளை ஓடையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த கல்மர படிமத்தை மீட்டு பத்திரப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என்று குன்னத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆணைவாரி கிளை ஓடையில் சாலை அமைக்கும் பணியின்போது தொன்மையான கல் மரப் படிமத்தின் மீது மண்ணை கொட்டி மூடி சாலை அமைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் மண்ணில் புதைக்கப்பட்ட கல் மர படிமத்தில் மீதிருந்த மண்ணை அகற்றி பாதுகாத்தனர். இருப்பினும் அங்கிருந்து கல்மர படிமம் மீட்கப்படாமல், கடந்த 1½ ஆண்டு காலமாக பராமரிப்பின்றி இருந்தது. கல்மர படிமத்தின் மீது வாகனங்கள் சென்றதால், அந்த படிமம் நாளுக்கு நாள் சிதிலம் அடைந்தவாறு இருந்தது. இது குறித்து குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கும், குன்னம் தாசில்தாருக்கும் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்பேரில் கடந்த 2-ந் தேதி குன்னம் கிராம நிர்வாக அலுவலர் விக்கி மேற்பார்வையில், அந்த கல் மர படிமத்தை ஆணைவாரி கிளை ஓடையிலிருந்து வெட்டி எடுத்தனர். அப்போது கல்மர படிமம் சிதிலமடைந்து இருந்ததால் 5 துண்டுகளாக எடுக்கப்பட்டது. அந்த படிமம் குன்னம் சிவன் கோவிலில் உள்ள பூங்காவில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா கல்மர படிமத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் அந்த படிமங்களை பெரம்பலூர் புதை படிம அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை குன்னம் கிராம நிர்வாக அலுவலர் விக்கி முன்னிலையில் குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் கல்மர படிமத்தை வேனில் ஏற்றி வந்து பெரம்பலூர் புதைபடிம அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.