Kalaignar Urimai Thogai: அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் 4 ஆயிரம் மகளிர்களுக்கு ஏடிஎம் கார்டு
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அந்த திட்டத்தின் தொடக்க விழா வாலாஜாநகரத்தில் நடந்தது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்து, அத்திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு அரியலூர், செந்துறை வட்டாரங்களை சேர்ந்த 2 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அந்த பணத்தை எடுப்பதற்கான வங்கி பற்று அட்டைகளை (ஏ.டி.எம்.) வழங்கினார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படிப்படியாக மற்ற வட்டங்களிலும் குடும்ப தலைவிகளுக்கு ஏ.டி.எம். அட்டைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். குறுஞ்செய்தி வரவில்லை என்றால் அவர்களது விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.
மேலும் இது தொடர்பான சந்தேங்கள் மற்றும் விவரங்கள் தெரிவிப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது, என்றார். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையராஜன், முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்து, ஏ.டி.எம். அட்டைகளை தகுதியான 2 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு வழங்கினார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழா நடைபெற்ற அரங்கிற்கு அருகிலேயே இருந்த நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தில் குடும்ப தலைவிகள் பணம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வங்கிகள் மூலம் 7 ஆயிரத்து 823 பேருக்கு ஏ.டி.எம். அட்டைகள் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மாவட்ட கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர் மற்றும் அனைத்து அரசுத்துறை முதல்நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.