திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் நீர் இருப்பு குறித்து திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 2018- ல் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 61-வது கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை தலைமைப்பொறியாளர் வி.சத்திய மூர்த்தி, கேரள மாநில பாசனத்துறை தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை மேலாண் இயக்குனர் கே.ஜெய்பிரகாஷ், காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவர் சுப்பிரமணியன் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது 4 மாநிலங்களிலும் பாசனத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு, பயிரிடப்படும் பாசன பரப்பளவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
மேலும் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளில் தற்போதைய நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு குறித்தும், 2021 ஜூன் மாதம் முதல் 2022 மே 3-ந் தேதி வரை பிலுகுண்டுலுவில் 259 டி.எம்.சி.தண்ணீர் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக அதிகாரியான ராமமூர்த்தி தெரிவித்தார். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவினர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை, தஞ்சை மாவட்டம் கல்லணை ஆகியவற்றை பார்வையிட்டனர்.அங்கு அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ததுடன் குறிப்பெடுத்து கொண்டனர்.
திருச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம்.31 -ந் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது நேரில் வந்து காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழுவினர் ஆய்வு நடத்தியது விவசாயிகள் யாருக்கும் தெரிவிக்கப்பட வில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் ஆற்று பாசனம் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடவேண்டும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கோடைகால காலகட்டத்தில் அந்த சமயங்களில் விவசாயம் செய்யும் பயிர்களுக்கு ஏற்றவாறு தண்ணீர் பாசனம் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பல இடங்களில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் தண்ணீரை அதிகளவில் சேமித்து வைக்க வேண்டும் அவ்வாறு சேமித்தால் விவசாயிகள் மிகவும் பயன் அடைவார்கள் என தொடர்ந்து வலியுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காமல் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்தது மிகவும் வருத்தமடைய செய்வதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது