(Source: ECI/ABP News/ABP Majha)
ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் - கி.வீரமணி
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்படும். அப்படி ஏற்படும்போது ஆளுநர் என்கிற பதவி இருக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலினை செய்யப்படும்.
திருச்சி மாநகர், புத்தூர் பகுதியில் உள்ள பெரியார் மாளிகை அரங்கில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் புலவர் வேட்ராயன், கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பானு, என்ற பாலசுப்பிரமணி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகல் ஆகியோர் மறைவுக்கு இந்த தலைமைச் செயற்குழு தமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டவும். மக்களின் சமூக பொருளாதார, கல்வி நிலையை அறியவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியமானதாகும்.
இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு வழக்குகளிலும், "ஜாதி வாரியாக கணக்கு (Quantifiable data) இருக்கிறதா? என்று நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பும் நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சமூக, பொருளாதார நிலையை அறிந்து கொள்ளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்வதும் மிகவும் இன்றியமையாததாகும். அதனை ஒன்றிய அரசு செய்யாத நிலையில் பீகார் அரசு ஒரு சர்வே மூலம் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்டோரின் விவரங்களை எடுத்து. மக்கள் தொகையில் அவரவர் எத்தனை விழுக்காடு என்று வெளியிட்டிருக்கும் அறிக்கையையும், அதற்காக மேற்கொள்ளளப்பட்ட சட்ட போராட்டத்தையும் திராவிட கழகம் வரவேற்கிறது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிட கழகம் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: பாஜக அரசு விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் மனுதர்ம யோஜனா திட்டத்தை கொண்டு வந்து குலத் தொழிலை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ராஜகோபாலாச்சாரி அரைமணி நேரம் இதை செய்ய வேண்டும் என கூறினார். தற்பொழுது அதை முழு நேரமாக செய்ய வேண்டும் என திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நாக்கில் தேனை தடவி மயக்க மருந்து கொடுப்பது போல் குலத்தொழில் செய்ய கடன் கொடுப்போம் என கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் இருந்து வருகிறது. தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது கல்வி கற்க வைக்க வேண்டும் என நினைக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இது போன்ற ஒரு திட்டத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது அது மிகவும் ஆபத்தான ஒன்று. இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு வரவேண்டும். எனவே அந்த திட்டம் குறித்து விளக்கும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளோம். அந்த பிரச்சாரம் நாகையில் தொடங்கி மதுரையில் முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மதிப்பூறு முனைவர் பட்டம் வழங்குவது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களில் உரிமைகளில் ஒன்று. அந்த வகையில் தகைசால் தமிழர் விருதை முதன் முதலில் பெற்ற சங்கரையா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அதற்கு ஆர் எஸ் எஸ் இன் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அவருக்கு இல்லாத அதிகாரங்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.
மேலும், எது எது அவர் வேலையோ அதை செய்யாமல் எது எது அவர் வேலை இல்லையோ அதை அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு செய்து வருகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலர் அவரை தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். ஒரு சுயமரியாதை உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பார். ஆனால் ஆளுநர் ஆர் என் ரவி போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்படும். அப்படி ஏற்படும்போது ஆளுநர் என்கிற பதவி இருக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலினை செய்யப்படும்.
மனித சமூகத்திற்கு தொண்டாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அது ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, நாத்திகவாதியாக சரி அவர்கள் பணி மனித சமூகத்திற்கான பணியாக இருந்தால் நிச்சயம் அரசு அதற்கு மதிப்பளிக்கும். அந்த வகையில் தான், மனிதநேய பண்பாளராக இருந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க அறிவிப்பு தான் என்றார்.