தமிழ்நாட்டில் முதன்முறையாக லேசர் ஒலி, ஒளி காட்சி திருச்சியில் விரைவில் தொடக்கம்
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி லேசர் காட்சிகள் மூலம் வரலாற்று சிறப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், திருச்சி தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி லேசர் காட்சிகள் மூலம் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்வதும் ஒன்றாகும். இதற்கான பணிகள் ரூ.8.8 கோடியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முன்னோட்டத்தை சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி நேரம், நுழைவு கட்டணம் ஆகியவற்றை இறுதி செய்யும் தீர்மானம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 நிகழ்ச்சிகளும், மற்ற நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரை மணி நேரம் ஒளிபரப்பாகும். திங்கட்கிழமை கிழமை தாயுமானவர் சுவாமி கோயில், செவ்வாய்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில், புதன்கிழமை திருவானைக்காவல் கோவில், வியாழன் சமயபுரம் மாரியம்மன் கோயில், வெள்ளிக்கிழமை கல்லணை, சனிக்கிழமை மலைக்கோட்டை, ஞாயிற்றுக்கிழமை கரிகால சோழன் ஆகியோரின் வரலாற்று சிறப்புகள் இடம்பெறும்.
மேலும், தெப்பக்குளத்தின் நடுவில் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அலகு நீரூற்றுகளில் லேசர் கற்றைகள் மூலம் ஆவணப்படக் காட்சிகளை பொதுமக்கள் தெப்பக்குளம் கரையில் உள்ள பார்வையாளர்கள் கேலரியில் இருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு 25 ரூபாயும், 15 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட்டு நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”டேங்க் பண்ட்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒலி அமைப்புகள் கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கும். நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கட்டுப்பாட்டு அறை ஏற்கனவே தொட்டியில் திறக்கப்பட்டுள்ளது. லேசர் ஷோவை பொதுமக்கள் தொட்டி நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கல் மண்டபத்தில் இருந்து பார்த்து மகிழ முடியும் என அதிகாரிகள் கூறியதுடன், பர்மா பஜார் தெரு மற்றும் வானப்பட்டரை தெருவை ஒட்டிய தொட்டியின் எல்லைகளில் இருந்து மக்கள் இதை கண்டுகளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தெருவோர வியாபாரிகள், NSB சாலை மற்றும் நந்திக்கோயில் தெரு வழியாக செல்லும் மக்களுக்கு லேசர் மற்றும் ஒலிக் காட்சி தெரியவில்லை. சிங்காரத்தோப்பில் உள்ள பர்மா பஜார் தெருவில் இருந்து யானைக்குளம் வரை சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைக்கவும், தெளிவான பார்வைக்கு வசதியாகவும், ஒரு பகுதி கடைகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தில் மாநகராட்சி இருப்பதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக லேசர் ஒலி, ஒளி மூலம் நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க கதைகளை மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது” எனக்கூறினர்.