மீண்டும் ஒரு அசம்பாவிதம்! பட்டாசு குடோனில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் உயிர் ஊசல்!
புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையை அடுத்துள்ள அத்திப்பள்ளம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையை அடுத்துள்ள அத்திப்பள்ளம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் பட்டாசு குடோன் தீ விபத்து தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர். வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி பட்டாசு மீது விழுந்து தீவிபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர், சேலம் மாவட்டம் ஆத்தூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர். அதேபோல் கடந்த 9ஆம் தேதி சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் மே 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மே மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மே மாதத்தில் இதுவரை நான்கு விபத்துகள் ஏற்பட்டு அதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் பட்டாசு குடோனில் மற்றும் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம் அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/c9JEaUu2dM
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 20, 2024