எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவுடன் போர் செய்யும் அளவுக்கு தைரியம் கிடையாது - கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத்தை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளோம் - கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் அணி தலைவர் லெனின் பிரசாத்தின் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியது: தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தவறான ஆடியோ ஒன்றினை அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். ஏதிரும் புதருமான அரசியல் ,பலி வாங்கக் கூடிய அரசியல், பிளாக்மெயில் செய்யக்கூடிய அரசியல் அண்ணாமலை வந்த பின்னர் தான் அதிகரித்து வருகிறது. திராவிட இயக்கத்தை பாரம்பரியமாக கொண்ட குடும்பம் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் எனவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பொய்யான குற்றச்சாட்டை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர் மீது வைத்திருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம் என்றார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது என்பது இதற்கு சான்று ஆகும். ராகுல் காந்தி மாபெரும் மக்கள் செல்வாக்கை பெற்று வருகிறார். இது கர்நாடக உடைய வெற்றிக்கு மட்டுமல்ல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்லின் வெற்றி என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர் அணி தலைவர் லெனின் பிரசாத் மிகவும் ஒழுக்கமானவர், அவர் காவல் நிலையத்திற்கு சென்ற போது எந்த விதமான தவறும் இழைக்காத போது அவரை காவல்துறையினர் அடித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு சென்றால் அங்கு பாதுகாப்பு தர வேண்டுமே தவிர இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாடு காவல்துறை நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். திருச்சியில் உள்ள கண்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் காவல்துறையினர் லெனின் பிரசாத்திடம் நடந்து கொண்டது குறித்து நாங்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச உள்ளோம். மேலும் கலைஞர் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்வதில் என்ன தவறு . மராட்டியத்தில் சிவாஜிக்காக நடுக்கடலில் மூவாயிரம் கோடி செலவில் சிலை அமைக்கிறார்கள். அது போல் எளிய தமிழரான கலைஞர் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார் எனவே அவருக்கு சிலை அமைப்பதில் தவறில்லை. கலைஞர் கருணாநிதியை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் அவரை ஐந்து முதல் முதலமைச்சராக தேர்வு செய்தனர். கலைஞருக்கு சிலை எழுப்புவது என்பது வரவேற்க கூடியது.
மேலும் கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைக்காக அண்ணாமலை சென்ற தமிழ் வாழ்த்து பாடல் முதலாவதாக மேடையில் ஒளிபரப்பானது, கர்நாடகாவில் இருந்தவர்கள் அதனை எடுத்துவிட்டு கன்னட பாடலை போட்டார்கள் அப்போது பேராண்மை மிக்கவராக இருந்திருந்தால் அண்ணாமலை தமிழ் பாடல் முழுவதுமாக ஒளிபரப்பு செய்து முடித்த பின்னர் கன்னட பாடலை போடுங்கள் என்று கூறியிருப்பார். ஆனால் வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டார் அண்ணாமலை , கர்நாடகாவில் கன்னட பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறல்ல அதற்காக பாதியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஏன் நிறுத்தினார்கள் என்ற கேள்வி எழுப்பினார். மேலும் எடப்பாடிக்கு பாஜகவுடன் போர் புரியும் அளவிற்கு தைரியம் கிடையாது, அவர் பாஜகவிற்கு அடிபணிந்து தான் போவார் என தெரிவித்தார்.