(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: கொலை வழக்கு: சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருச்சி அருகே தொழில் அதிபர், கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவருடைய கார் டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி திருச்சி-திண்டுக்கல் சாலையில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில், துரைராஜூம், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வைர வியாபாரி தங்கவேலும் நண்பர்கள் என தெரியவந்தது. மேலும் தங்கவேல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று பரிகாரம் செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அந்த ஜோதிடர் மூலமாக தங்கவேலுக்கு கண்ணன் என்ற சாமியார் என்பவர் அறிமுகமானார். இதன் மூலம் தங்கவேல் வீட்டுக்கு அடிக்கடி சாமியார் கண்ணன் வந்து சென்றுள்ளார். இதில் தங்கவேலின் மனைவி யமுனாவுக்கும், சாமியார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனை அறிந்த துரைராஜ் யமுனாவை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சாமியார் கண்ணன், கள்ளக்காதலி யமுனாவுடன் சேர்ந்து திட்டமிட்டு துரைராஜையும், அவரது கார் டிரைவர் சக்திவேலையும் எரித்து கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலெட்சுமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வயது முதிர்வு காரணமாக திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யமுனாவின் தாய் சீதாலெட்சுமி மரணம் அடைந்தார். மற்ற 2 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக 100-க் கும் மேற்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி, கிராமநிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமான சாட்சிகளாவர்.
இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு, வக்கீல்கள் விவாதமும் நடைபெற்று முடிந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்த சாமியார் கண்ணன், திருச்சி மகளிர் சிறையில் இருந்த யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி கே.ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் கண்ணன், யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து சாமியார் கண்ணன், யமுனா ஆகிய 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார்.