சொந்தமாக மருத்துவக்கல்லூரிகள்; அதனால்தான் நீட் எதிர்ப்பு: திமுகவை சாடிய அண்ணாமலை
தேர்தலின்போது தி.மு.க. அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று துறையூர் சட்டமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துறையூர் சட்டமன்ற தொகுதியில் துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பெரிய கடை வீதி, பாலக்கரை, திருச்சி ரோடு வழியாக சென்று துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தனது நடை பயணத்தை முடித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியது..
”திமுக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக துறையூர் பகுதியில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தி.மு.க.வினரால் பலமாக தாக்கப்பட்டார். மேலும் வருவாய் துறையில் பணிபுரியும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் நிலையில் உள்ளது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சொல்லும் படி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை” என்றார்.
மேலும், ”திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. குரல் கொடுத்த உடன் விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டது. இதிலிருந்தே விவசாயிகளின் மீது தி.மு.க.விற்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.வில் உள்ள பல நபர்களுக்கு சொந்தமாக மருத்துவ கல்லூரி இருப்பதால், தங்களிடம் உள்ள சீட்டுகளை விற்பனை செய்ய முடியாததால், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பி.எம். கிசான் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 55 ஆயிரம் கோடி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.
ஆனால் தி.மு.க.வோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 511 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இது நாள் வரை அதில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதாரணமாக துறையூர் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை, அரசு கலைக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறியும், இதில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. தற்சமயம் தமிழக முழுவதும் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அனைத்து இளைஞர்களும் வாக்காளராக பதிவு செய்து மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி 3-வது முறையாக பிரதமராக அமர பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.