ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம்; கண்டுகொள்ளாத திமுக எம்எல்ஏ - பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள்தொடங்குமா? இல்லை அறிவிப்பு மட்டும் தானா? பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இந்தது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதை சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பேருந்து நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பேருந்து நிலையம் அமைக்கலாம் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பணிகள் தொடங்கிய சில மாதங்கள் கழித்து அனைத்து நிறுத்தி வைக்கபட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என கூறினர். மேலும் நிதி வந்தால் மட்டுமே பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்தனர். மேலும் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, ஸ்ரீரங்கம் பகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுக்கிறேன், குறிப்பாக சாலை வசதி, குடிநீர், மின்சாரம், குப்பைகளை உடனடியாக அகற்றுவது, உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என்று தற்போது எம்.எல்.ஏ பழனியாண்டி வாக்கு கேட்டார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு இதுவரை மக்களை நேரில் சந்தித்து குறைக்களை கேட்கவில்லை, எந்த திட்டமும் முறையாக செய்து தரவில்லை என குற்றம்சாட்டினர். குறிப்பாக ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பணிகளை தொடங்கினர். ஆனால் தொடங்கிய வேகத்தில் பணிகள் நிறுத்தபட்டது. கிட்டதட்ட 1 ஆண்டு காலமாக பணிகள் நடக்காமல் உள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள், அரசியல் வாதிகள் கண்களுக்கு தெரிவார்கள், ஸ்ரீரங்கம் மக்களின் கனவு, கனவாகவே உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.