திருச்சியில் தெறிச்சியோடிய முதல்வர் உத்தரவு: சாலை நடுவே திமுக கொடிகள்... எப்போ காவு வாங்குமோ?
திருச்சியில் திமுகவினர் சாலைநடுவே பள்ளம் தோண்டி கட்சிகொடியை கம்பத்தில் ஏற்றியதால், சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குறைகளை நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சென்று மனுக்களை பெற்று அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று திருச்சி மாநகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். திருச்சியில் இலால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில், கேர் (CARE) கல்லூரியிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதையடுத்து திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் அடுத்தடுத்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருந்ததால் திருச்சி மாநகரில் வெஸ்ட்ரி ரவுண்டானா பகுதி, மேஜர் சரவணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சியினர் இரும்பு கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். சில பகுதிகளில் சாலையின் நடுவில் துளையிட்டு இரும்பு பைப்பால் ஆன கம்பத்தை நட்டு கொடியை பறக்க விட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் விழா நடத்தும் போது இதுபோன்று கொடிக் கம்பங்களை சாலையில் நடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் பல இடங்களில், கொடிக் கம்பங்கள் குறைந்தது 1-2 அடி தூரத்திற்கு வண்டிப்பாதையில் தோண்டப்பட்டதால், வரும் நாட்களில் மழைக்குப் பிறகு சாலைகள் மோசமாகிவிடும். ஏற்கனவே போதிய பார்க்கிங் இடம் இல்லாததால், சாலையை ஒட்டிய காலி இடத்தில் நிறுத்தப்படும் கார்களும் கொடிக்கம்பங்களால் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து இக்கொடி கம்பங்களால் விபத்து ஏற்படுவதும், கொடிக்கம்பங்கள் வாகன ஒட்டிகள் மீது விழுந்து விபத்தில் சிக்கும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்கள் உத்தரவையும் மீறி தொடர்ந்து இதுபோன்ற கொடிக்கம்பங்கள் நடபடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கட்சியினரும் இதுபோன்ற நிகழ்வில் இனி ஈடுபடக் கூடாது சாலையை துளையிட்டு கொடிக் கம்பங்களை நடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற பொதுமக்களுக்கு இடையூறாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த போதும், தொடர்ந்து அமைச்சர்களை வரவேற்க இது போன்ற ஆடம்பர வரவேற்புகளும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.