ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
Gate Exam Result: "திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகள் கேட் தேர்வில் சாதித்து ஐஐடியில் இடம் பிடித்துள்ளார்"

"தொட்டியம் தனியார் பொரியல் கல்லூரியில் படித்து வந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகள், கேட் தேர்வில் தேசிய அளவில் 105வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்"
கேட் தேர்வு (GATE Exam)
கேட் தேர்வு (GATE Exam) என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதுகலை படிக்க வேண்டும் என்றால் இந்த, கேட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்வு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.
திருச்சி மாணவி சாதனை
இன்ஜினியரிங் மாணவர்கள் முதுகலை படிக்க விரும்புபவர்கள், கேட் தேர்வு எழுதி அதன் மூலம் முதுகலை படிப்பில் சேருவார்கள். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி மகள், கேட் தேர்வில் தேசிய அளவில் 105வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையம் கிராமம் பகுதியை சேர்ந்தவர் நீலி வளத்தான். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர் அக்ராமத்தில் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். தம்பதியர் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இதில் இரண்டாவது மகளான விஜி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ஐ.ஐ.டியில் கிடைத்த இடம்
கடந்த 2021 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு பின், தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தொட்டியம் பகுதியில் செயல்படும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறையில் பி.இ இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக விஜி முயற்சி செய்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜி முதுநிலை படிப்புக்கான இந்த ஆண்டு நடந்த கேட் தேர்வு எழுதியுள்ளார். அதில் இந்திய அளவிலான தரவரிசைப்படி 105 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி தலைவர் பெரியசாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவி விஜய் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சாதனை, கல்லூரியின் உயர்தர கல்வித் தரத்தையும், மாணவர்களின் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பையும் வெளிப்படுத்துகிறது என்றும், மற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.
தற்போது தேர்ச்சி பெற்ற மாணவி விஜி மேற்குவங்கம் கரக்பூர் ஐ.ஐ.டியில் நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறையில் முதுநிலைப் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். மிகவும் பின் தங்கிய கூலித் தொழிலாளி மகள், கேட் தெருவில் சாதித்திருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















